யாழ்ப்பாணம் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசத்தின் கிராமங்களான கீழ்கரவை, கட்டைவேலி தென்துன்னைமத்தியிலே தல்லையப்புலம் புண்ணிய பூமிதன்னில் அருள்பாலித்து ஆட்சிபுரியும் எல்லாம் வல்ல வீரபத்திரர்பத்திரகாளி அம்மன் சமேதராக இருக்கும் ஆலய வரலாற்றுச் சிறப்பு மகிமை அருள் சித்தி எல்லாம் ஒருங்கேஅமைந்திருப்பதனால் அன்றும் இன்றும் அனைத்து மக்களினது வழிபாட்டுக்குரிய தலமாக விளங்குகின்றது. வீரபத்திரர்பத்திரகாளி அம்மன் சமேதராக இருக்கின்றபோதும் பத்திரகாளி அம்மனின் பெயர் நாமம் எல்லா மக்களாலும் வணங்கிவழிபட்டு வருவதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இருநூறு வருடங்களுக்கு முன் கொன்றை மரநிழலில் கொட்டில் அமைத்து ஞானியார் ஒருவர் பூசைசெய்து வந்ததாகஅறிகின்றோம். எதுவும் எம் முன்னோரால் ஆவணப்படுத்தப்படவில்லை. ஆனாலும் அந்தக்காலம் தொடக்கம்இன்றுவரை தல்லையப்புலம் குமரக்குள மக்கள் தரிசித்து ஆலய வளர்ச்சிக்காக பெரும் பங்காற்றி வருகின்றார்கள். 1890ஆம் ஆண்டு காலப்பகுதியில் மூலஸ்தானம் வெளி மண்டபங்கள் சுண்ணாம்புக் கற்களால் கட்டப்பட்டு ஓலைஓடுகளால் வேயப்பட்டு மடப்பள்ளி, கிணறு, சுற்றுமதில்கள் எல்லாம் கட்டப்பட்டிருந்தன. ஆலயத்திற்கு அருகாமையில்குடியிருந்த சைவக்குருமார்கள் நித்திய, நைமித்திய பூசைகளை பொதுமக்கள் உதவியுடன் செய்து வந்தனர். ஆறுமுகம் ஐயா, சுப்பையா ஐயா, கந்தையா ஐயா அவர்கள் தான் பூசைசெய்து வந்தனர். அவர்களின் பின்சோமசுந்தரக்குருக்கள், சிவராசாக் குருக்கள் அவர்கள் தற்போது பூசகர்களாக கடமைபுரிகின்றனர். 1925ஆம் ஆண்டுபொதுச்சபை கூட்டப்பட்டு பரிபாலனசபை தெரிவுசெய்யப்பட்டன. இது உறுதி செய்யப்பட்டுள்ளது. இப்பரிபாலனசபையில் வேலப்பர் (தலைவர்), தம்பர், இராமர், கதிரேசு, சித்தர் தொடர்ந்து கந்தையா, சிதம்பரப்பிள்ளை, சின்னையா, மயில்வாகனம் (ஆசிரியர்) பரிபாலனத்தில் பங்காற்றி வந்துள்ளனர்.
ஆலயத்தின் முன்வாசலுக்கு தெற்குப் பக்கமாக காளி அம்மன் கொட்டிலில் சூலமாக வைத்து பூசைசெய்யப்பட்டுவந்தன. அந்தக் காலத்தில் ஆலயத்தில் வருடந்தோறும் மணவாழக்கோலத் தினத்தில் வேள்வி மடைகள்போட்டு தீக்குளிப்பு பலிவெட்டுதல் நடைபெற்றுவந்தன. இதில் தல்லையப்புலம் வாச்சியான சித்தர் என்பவர்சுவாமிகளின் அனுக்கிரகத்தால் வருத்தம், துன்பம் உள்ளவர்களுக்கு வீபூதி போட்டு அனுப்புவார். பலன் கிடைக்கும். காலப்போக்கில் வேள்விகள் நிறுத்தப்பட்டு மணவாளக்கோல நாளில் திருவிழா நடைபெற்றுவந்தன. 1945ஆம்ஆண்டில் தல்லைவாழ் பொதுமக்களின் உதவியினால் மூலஸ்தானம், அர்த்த மண்டபம் வைரக் கற்களால் கட்டப்பட்டுவீரபத்திரர் பத்திரகாளி அம்மனை பிரதிஷ்டை செய்து வைத்தனர். ஆனாலும் ஆலயம் வளர்ச்சியடையவில்லை. 1952ஆம் ஆண்டு தல்லையம்புலம் வாசியும் சிங்கப்பூரில் வசித்தவருமான சபாபதி கந்தையா என்பவர் இங்கு வந்துமகா மண்டபமும், தம்ப மண்டபமும் தமது தனிப்பட்ட அன்பளிப்பாகக் கட்டுவித்தார்.
1984ஆம் ஆண்டு ஆலய முன்னேற்றம் கருதி திருப்பணிச்சபை ஒன்று தெரிவுசெய்யப்பட்டது. த.சரவணை (ஆசிரியர்) தலைவர், சி.ஆனந்தம் (பொருளாளர்), கி.பரஞ்சோதி (செயலாளர்), க.கணேசன், த.சண்முகம், ஆ.நடேசன்(ஆசிரியர்), வ. கணபதிப்பிள்ளை (அதிபர்), ந.தெய்வேந்திரன் ஆகியோர் அங்கம் வகித்தனர். பொதுமக்களின்அன்பளிப்பால் புனரமைப்பு வேலைகள் நடைபெற்றன. மடப்பள்ளி, களஞ்சிய அறை, கிணறு, சுற்றுமதில் எல்லாம்கொங்கிறீற் கற்களால் முற்றாகக் கட்டப்பட்டன. மூலஸ்தான தூபிவேலைகள் எல்லாம் செய்யப்பட்டு மகாகும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதில் பொருளாளராக இருந்த சி.ஆனந்தம் அவர்களின் முயற்சியும் பங்களிப்பும்மிகவும் பாராட்டுதற்குரியதாகும். 1987 பரிபாலனசபை தெரியப்பட்டு ஆ.நடேசன் (தலைவர்) சி.மகேஸ்வரன், க.கணேசன், அ.நமசிவாயம், சி.சோதிலிங்கம், கா.இரத்தினம் இவர்களின் முயற்சியால் பொதுமக்களின் அன்பளிப்பில்வெளிமண்டபம் கட்டிப் பூர்த்தி செய்யப்பட்டது.
1990ஆம் ஆண்டு பரிபாலனசபைத் தெரிவில் க.கணேசன் (தலைவர்), வ.கணபதிப்பிள்ளை அதிபர் (செயலாளர்), கா.இரத்தினம் (பொருளாளர்), சி.சோதிலிங்கம், கு.பஞ்சாட்சரம், சி.சிவபாதம், க.நல்லதம்பி உறுப்பினராகஇருந்தனர். பொதுமக்கள் உதவியினால் அன்னதான மடம், வேறு திருப்பணிகள் கட்டப்பட்டு எழுந்தருளி மூர்த்திகள்எல்லாம் செய்யப்பட்டன. 1999 காலப்பகுதியில் பரிவார மூர்த்திகள் (சுற்றுக் கோயில்களான) விநாயகப்பெருமான்,முருகப்பெருமான் வள்ளிதெய்வானையுடன், வைரவக்கடவுள், நவக்கிரகங்கள், மணிக்கூட்டுக்கோபுரம், வசந்தமண்டபம் பின் சண்டேசுவரமூர்த்தி, தீர்த்தக்கிணறு, அன்னதானமடக் குசினி, களஞ்சிய அறை இரண்டுமேற்குறிப்பிட்டவை எல்லாம் தனிப்பட்டவர்களின் உபயங்கள். அத்துடன் பொதுமக்களின் பண அன்பளிப்பால்உள்வீதி சுற்றிவரத் தூண்கள் போடப்பட்டன. 2013இல் இடைக்காலத்தில் கு.பஞ்சாட்சரம் (தலைவர்), பொ.கமலநாதன் (செயலாளர்), த.பார்த்தீபன் (பொருளாளர்) இவர்கள் காலத்தில் வசந்தமண்டபத்திலிருந்துஉள்வீதிக்கு ஒருபகுதி கொட்டகைக் கூரை வேலைகள் நடைபெற்றன. இதில் பொருளாளர் த.பார்த்தீபன் அவர்கள்சிறப்பாக கடமைபுரிந்தார். 2005இல் க.கணேசன் (தலைவர்), ம.ஜேஸ்தாஸ் (செயலாளர்), சி.பேரின்பநாதன்(பொருளாளர்) திருப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது நாட்டின் குழப்பநிலையால் வேலைகள்தடைப்பட்டன. தற்போது
வ.கணபதிப்பிள்ளை (அதிபர்) பொருளாளர், கி.ஜெயசீலன் (உபசெயலாளர்), சி.சோதிலிங்கம் (உபதலைவர்) சிறப்பாகத் திருப்பணி வேலைகள் நடைபெற்றுக் கொண்டு வருகின்றது. உள்வீதி தெற்கு வாசலில் இருந்து மேற்குப்பக்கவீதிக் கொட்டகை, முருகன் வாசல் கொட்டகை தனிப்பட்ட அன்பர்கள் உபயமாகச் செய்துள்ளனர். தல்லையப்புலம் குமரன்குள மக்களெல்லாம் தங்கள் குலதெய்வம் என்று என்ன வேண்டுமென்றாலும் உடன் செய்துகொடுக்கின்றனர். வெளிக்காளி அம்மன் வைரக் கற்களால் தனிப்பட்ட முறையில் விஜயலட்சுமியால் கட்டப்பட்டுகும்பாபிஷேகம் செய்யப்பட்டுள்ளது. வடக்கு வீதி அகலமாகப் போடுவதற்கு த.சரவணை (ஆசிரியர்), திருமதிபொ.அன்னம் இருவரும் ஒரு பரப்புக் காணி தரும சாதனம் செய்துள்ளார் பாராட்டுதற்குரியது. அத்துடன் விநாயகப்பெருமான் எழுந்தருளி வ.கணபதிப்பிள்ளை அவர்களால் செய்து கொடுக்கப்பட்டன.
மேலும் பத்துநாள் (மஹோற்சவம்) திருவிழா நடத்துவதற்கும் உபயகாரர் விரும்பினார்கள். 2011ஆம் ஆண்டுதொடக்கம் ஆனி மாதத்தில் பத்துத் திருவிழா நடைபெற்று ஆனி உத்தரத்தில் தீர்த்தோற்சவம் நடைபெற்றுவருகின்றன. எல்லா மக்களும் உறவுமுறைக் குடும்பங்களாக ஒவ்வொரு திருவிழாவையும் சிறப்பாக நடத்திவருகின்றனர். சுவாமிகள் அழகாக அலங்கரிக்கப்பட்டு வீதிவலம் வருவதை மனங்குளிரக் கண்டு வாழ்த்திவணங்குகின்றனர். மேலும் கொடித்தம்பம், யாக அறை இவைகள் தனிப்பட்ட உபயகாரர்களால் செய்துகொடுக்கப்பட்டுள்ளது. இந்த உற்சவத்தில் ஆனி உத்தரம் தீர்த்தம் மிகவும் புனிதமானது. சிறப்பாக வெளியில்சுவாமிகள் தீர்த்தம் ஆடவேண்டுமென ஆசைப்பட்டோம். அம்பாளின் அருளால் வடக்கு வீதியில் காணிதான்பொருத்தமானது என விரும்பினோம். இரண்டு பரப்புக் காணி கேணி கட்டுவதற்காக திருமதி கிருஷ்ணபிள்ளைதங்கப்பாக்கியம் மனமுவந்து தரும சாதனம் செய்துள்ளார். இதன் பயனாக தல்லையப்புலம் வாசிகளும் கனடாவில்வசிக்கும் அ.முருகேசு குடும்பம், அ.தம்பிஐயா குடும்பம் நேரில் வந்து 2012இல் கேணியைக் கட்டுவித்து உத்தரதீர்த்தத்தில் கலந்து தரிசித்தனர். இந்தத் தீர்த்தக் கேணியைக் கட்டுவதற்கு உதவியாகவும் உறுதுணையாகவும்இருந்தவர் பரிபாலனசபை செயலாளர் ம.யேசுதாஸ் அவர்களே. இன்றும் கேணியை பராமரித்து வருகின்றார்.
வீதி உலா வருவதற்கு சகடை உபயகாரி ஒருவரால் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. சிங்க வாகனம், அன்ன வாகனம், சிம்மாசனம், கேடகம், குதிரை வாகனம், எலி வாகனம் எல்லாமே தனிப்பட்டவர்கள் செய்து கொடுத்திருக்கின்றனர். விழாக் காலங்களில் மின்சார வெளிச்சம் கொடுப்பதற்காக லண்டனில் வசிக்கும் திரு.ரங்கநாதன் வனிதா குடும்பம்மிகவும் சக்தி வாய்ந்த பெறுமதி மிக்க லைற் என்ஜின் அன்பளிப்பு செய்திருக்கின்றார்கள். முருகன் வள்ளியம்மன்தெய்வானை அம்மன் எழுந்தருளிகள் சி.மகேஸ்வரன் (ஜேர்மனி) அவர்களால் செய்து கொடுக்கப்பட்டது.எல்லாவற்றிலும் மேலாக இறுவனுக்கு விருப்பமானது தேர். ஆகவே வீரபத்திரர் பத்திரகாளி அம்மன் அனுக்கிரகத்தால்9ஆம் திருவிழா உபயகாரரில் ஒருவரும் தல்லையப்புலம் வாசியும் லண்டனில் குடும்பமாக வசிக்கும் திரு.நவரத்தினம்மாலினிதேவி குடும்பம் சித்திரத்தேரை முழுமையாகத் தங்கள் செலவில் செய்து கொடுப்பதற்கு விரும்பிக்கொண்டனர். நேர்த்தியை பூர்த்தி செய்வதற்கு லண்டனிலே சிறந்த ஸ்தபதி கிடைத்ததும் புதுமைதான். துன்னாலைவாசியும் லண்டனில் வசிக்கும் சிவஶ்ரீராம் கெங்காதரக்குருக்கள் மூலமாக திருநெல்வாசியும் லண்டனில் வசிக்கும்சிறந்த விற்பன்னரான சுரேந்திரன் (இந்திரன்) அவர்களோடு ஒப்பந்தம் செய்து இந்திரன் அவர்களை இங்குஅனுப்பிவைத்தனர்.
அவர் தேருக்குரிய உபகரணங்களெல்லாம் கொண்டு வந்து 2012ல் ஆலய முன்றலில் தேர் கட்டுமான வேலையைஆரம்பித்தார். இதில் அவருடைய தம்பியார் சுபாகர் என்பவர் முக்கிய வேலை ஆளாக நீண்டகாலமாக கடமைபுரிந்தார். இன்னும் பல ஆச்சாரிகள் இந்தியாவிலிருந்து அழைக்கப்பட்ட வேலைகாரர்கள் எல்லாம் வேலையில் இணைந்துகொண்டனர். இதற்கு வேண்டிய உதவிகளைத் தல்லைவாழ் பொதுமக்கள் பரிபாலனசபை வாலிபர்கள் செய்துகொடுத்தனர். தேர் தரிப்பதற்கான மண்டபம் அமைப்பதற்கு பல லட்சக் கணக்கான பணம் தேவைப்பட்டது.வெளிநாட்டிலும் இங்கிருக்கும் தல்லைவாழ் மக்கள் தேவையான பணத்தை மனமுவந்து கொடுத்தனர். வ.கணபதிப்பிள்ளை (அதிபர்) பொருளாளர், அவர்கள் பொறுப்பாக இருந்து தேர் மண்டபத்தை சிறப்பாகச் செய்வித்துமுடித்துள்ளார். மேலும் தேரிக்குரிய வேலைகளையும் அவரே கூடிய பங்கெடுத்துக் கொண்டார். அத்துடன் தேர் உலாவருவதற்கான வீதிகள் புதிதாக அமைக்கப்பட்டன. இன்னும் அவருடைய முயற்சியால் பொதுமக்களின் அன்பளிப்புடன்சற்பதோஷம் நீக்கும் சிவ அவதாரமான நாகதம்பிரான் ஆலயம் தெற்கு வீதியில் புதிதாக அமைக்கப்பட்டுகும்பாபிஷேகம் செய்யப்பட்டுள்ளது. இன்னும் உள்வீதியில் களஞ்சிய அறையும் கட்டப்பட்டுள்ளது. இதற்கெல்லாம்திரு.அ.நமசிவாயம் உறுதுணையாக நின்று உதவினார். பொருளாளர் வ.கணபதிப்பிள்ளை, அ.நமசிவாயம் அவர்களின்நல்முயற்சிகளை மிகவும் பாராட்டுகின்றோம். இன்னும் தேர் மண்டபத்தை கட்ட ஒப்பந்தம் செய்து சிறப்பாக பூர்த்திசெய்து உரிய காலத்திற்கு உதவிய திருநெல்வேலி சுதாகர் அவர்களையும் பாராட்டுகின்றோம்.
ஆகம விதிப்படி எல்லா அம்சங்களும் பொருந்திய சித்திரத் தேரிலே இன்று வீரபத்திரர் பத்திரகாளி அம்மன் aவீதி உலாவருவதைப் பக்த கோடிகள், வணக்ககாரர்கள் அடியவர்களெல்லோரும் பக்திப்பரவசத்துடன்ஆரோகணித்து வடம்பிடித்து இழுக்கும் கண்கொள்ளாக் காட்சியைக் காணக்கூடியதாக இருக்கின்றது. இந்தச்சித்திரத்தேரை பல லட்சம் ரூபா செலவு செய்து ஆலயத்தை சிறப்பித்த திரு.நவரத்தினம் மாலினிதேவிகுடும்பத்திற்கு திருவருட்பேறு பெற்றுவாழ எல்லாம் வல்ல வீரபத்திரர் பத்திரகாளி அம்மனைப் பிரார்த்திக்கின்றோம். இந்த ஆலயம் எல்லா வளங்களாலும் சிறப்பாக பொலிவுற்று விளங்க எம்மினமக்கள்வழங்கிய அன்பளிப்பும்உபயங்களும் முயற்சிகளுமே ஆகும். ஆலயத்தில் நீண்டகாலம் தொண்டனாகவும் நிர்வாகத்தில் பணிபுரிந்தமையாலும்ஆராய்ந்தும் நேரில் பங்குபற்றியதாலும் அனுபவ ரீதியாக வரலாற்றை குறிப்பிட்டுள்ளேன். ஆலய பொதுச்சபை, பரிபாலனசபை, திருவிழா உபயகாரர்கள், திருப்பணிகள் செய்தவர்கள், வணக்ககாரர் அனைவருக்கும் வீரபத்திரர்பத்திரகாளி அம்மன் அருள் ஆசி வேண்டிப் பிரார்த்தித்து நிறைவு செய்கின்றேன்.
க.கணேசன்
தல்லையப்புலம் வீரபத்திரர் பத்திரகாளி அம்மன்
பரிபாலன சபைத் தலைவர்.(12.07.2013)